
அப்பாக்களுக்கு மகள் என்ற ஸ்தானத்தில் பெண் அடி வைப்பது இரண்டாம் அல்லது மூன்றாம் தடவையாக இருக்கும். அந்த வயதில் பெண்ணைப் பற்றிய ஒரு முழு நிர்மானம் மனதிற்குள் உருவாகியிருக்கும். அம்மாவில் துவங்கி அக்காவோ,தங்கையோ வாய்த்த பின், சற்றே நிதானமான சூழலில் ஒரு ஆண்மகனுக்கு பெண் வாய்க்குபோது, அதை பேணுவதில் தகப்பனைத் தவிர சிறந்த ஆள் வேறு யாராகவும் இருக்க இயலாது.
அன்னையின் உருவத்தை அவன் மகள் மீது பார்கிறான். தான் கடந்து வந்த பாதையில் சந்தித்த அனைத்து பெண்களின் உருவகமும் தன் மகள் மீது வடிக்கிறான். தவறோ தப்பிதமோ தன் பிஞ்சு மகளின் செல்ல வளர்ப்பில் உருகிறான். அவளை உலகின் எல்லா பெண்களின் இருப்பிடமாகவும், தன் மகள் பெண்ணினத்தின் வார்ப்பாக நினைக்கிறான்.
அதீத உருவகம் அதீத அன்பில் முடிகிறது. தான் செய்த தவறுகளின் வடிகாலாக தன் மகளைப் போற்றுகிறான். இதனாலேயே அந்த பெண்ணும் தன் தந்தையை ஒரு தனி ஜீவனாக பார்க்க முடிகிறது. வேறு எந்த ஆண்மகனும் தன் தகப்பனை ஒப்பும் வகையில் திகழ முடியாதவனாகி விடுகிறான்.
அதே பெண் அந்த ஒரு ஆண்மகனைப் கண்டபின் தகப்பனை விலக்குவது சாதாரணமாகிறது. இதைப்புரிந்த கொண்ட தகப்பன்மார்கள் தவிப்பது எனக்கு புரிகிறது.
