games

எனக்கும் கிரிக்கெட்டுக்கும் என்றுமே ஏழாம் பொருத்தம் தான். மற்ற விளையாட்டை போலில்லாமல் இதில் நான் சராசரிக்கும் கீழ்.. இதைக் குறித்து எனக்கு எப்போதும் வருத்தமும் இருந்ததில்லை. இதற்கு காரணம் எங்கள் தெருவில் இன்ன விளையாடுவது என்றில்லாமல் புட்பால், ஹாக்கி, பாட்மிட்டன், என்று எதையும் விட்டு வைத்ததில்லை.

மைதானம் , விளையாட நண்பர்கள் என்று குறைவில்லாமல் எங்கள் விளையாட்டு சீசன் ஆரம்பிக்கும். பரிட்சை விடுமுறை அன்றே முடிவு கட்டி விடுவோம். “டேய் சி செக்டர் கிரவுண்டுல பிரதீப் டீமோட இன்னிக்கி பெட் மாட்ச், எக்ஸாம் முடிஞ்ச கையோட ப்ராக்டீஸுக்கு வந்திடு.” இப்படி அணியின் பிரதான சீமான்களுக்கு அழைப்பு வரும். ஒருவர் மாற்றி ஒருவர் மற்றவனை விடியலுக்கு சரியாக எழுப்பி விடுவோம்.

கிரிக்கெட் மட்டைகள் அணிக்கு இரண்டு , அவர்களே கொண்டு வர வேண்டும். பெட் முன் தொகையில் டென்னிஸ் பந்து வாங்கி விடுவோம். பதினைந்து ஓவர் மாட்ச். வெயிலின் தன்மையைப் பொருத்து விளையாடும் நேரம் குறிக்கப்படும். வென்ற அணிக்கு, முழுத்தொகை. பெரும்பாலும் பெட் தொகை 50,100 தாண்டாது. ஜெயித்த அணியினர் ஏரியாவின் பேக்கரியை ஆக்கிரமிப்பர். அடுத்த பெட் மாட்சுக்கான பரிவர்த்தனையுடன் அன்றைய சபை கலையும்.

தொலைகாட்சியில் என்ன விளையாட்டு ஒளிபரப்ப படுகிறதோ அந்த விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுப்போம். புட்பால் என்றால் பந்தின் காற்றைக் குறைக்க வேண்டும். இது கண்ணாடிகளின் பாதுகாப்புக்காக. காட்டுமிராண்டிகள் பார்வேர்டு நிலைக்கு தள்ளப்படுவார். உயரமானவன கோல் கீப்பர்.

அடுத்து ஹாக்கி, மட்டைக்கு இருக்கவே இருக்கு, கொய்யா மரக்கிளை மற்றும் ரப்பர் பந்து , இவை தவிர்த்து அடி வாங்க உடம்பு வளர்க்கும் அதிதைரியசாலிகள். விழுப்புண்களை தவிர்க்க சில விதிகள் உண்டு. மட்டை ஒரு உயரத்திற்கு மேல் கூடாது. லாங் ஸாட் கூடவே கூடாது.

கோடை விடுமுறைகளில் (poor guys games) புவர் கைஸ் கேம்கள் களைகட்டும். பம்பரம் மற்றும் கோலியைத்தான் குறிப்பிடுகிறேன். உடைந்த பம்பரத்திற்கும் , புது கோலிக்கும் பலர் வீட்டில் திடீர் திடீரென பணம் காணாமல் போகும் . கில்லி தண்டா மிக அரிதாக விளையாடுவோம். சில கண்களை பதம் பார்க்கும் என்பதால பெரிசுகள் இதை தவிர்க்க சொல்லி விடுவார்கள் .

கிரிக்கெட் புலிகள் புவர் கைஸ் கேம்களில் பயங்கர சொதப்பல் மன்னர்கள். அவர்களது பம்பரம் குறி வைத்து பிளக்கப்படும், கோலிகள் இழக்கப்படும். புவர் கைஸ் ஒரு அணியில் திரண்டு இவர்களை பதம் பார்ப்பார்கள்.

தொடரும்…