trichy

நீர் வரத்து குறைந்திருந்தாலும் சிறுவர்களின் குதூகலத்துக்கு குறைவில்லாமல் , சிறு சிறு மணல் மேடுகளுக்கு நடுவில் காவிரி. இதை ரசிக்க கரண்ட் இல்லாத ஒரு ஞாயிறுக்கிழமையும் அது இல்லாமல் இயங்காத தொலைக்காட்சியும் தேவையாயிருந்தது. அப்படியே நகரத்தையும் சற்று பார்க்கலாமென்ற ஆசை சற்று நியாமாக பட்டதால் வீர்ரென்றேன். எங்கெங்கும் பார்கினும் போஸ்டர்கள், புதிதாக துவங்கப்பட்ட கட்சிக்கு பத்தாம் ஆண்டு துவக்க விழா, சிலரை வானளவு புகழ்ந்தோ , சிலரை நன்றாக வஞ்சியோ சுவரெங்கும் கருப்பு வெள்ளைகளில் அர்த்த மில்லாத கிறுக்கல்கள். முடிக்கப்பட்ட பாலம் ஒன்று, முடிஞ்சுடும் முடிஞ்சுடும் என்று இழுவைப் பாலம் இன்னொன்று.

“அஞ்சு பைசா திருடுனாத் தப்பா?”
“இல்லடா இந்த வயசுல எல்லாருக்கும் தெரியற மாதிரி இவ்வளவு சின்னதா திருடறதுதான் தப்பு “. இப்படி புரியாத வயதில் கல்லனையை நோக்கி குரங்கு பெடல் போட்டதற்கு வாங்கி கொண்டது நினைவுக்கு வருகிறது. வீட்டை விட்டு அப்போதுதான் வெளி சுவாசம் கண்டேன். எங்கள் நண்பனின் அண்ணணுக்கு தெரிந்தவன் ஒருவன் மிகுந்த அக்கறையுடன் போட்டு கொடுக்க , எங்கள் பெற்றோர்கள் மிகுதியா கவலைக் கொண்டார்கள். “என்னங்கடா மிசை மொளச்சிடுச்சுன்னு நினைப்பா?” , இப்படி திட்டாவிட்டாலும் ஏதோ இது குறித்து பெரிய சர்ச்சை கிளம்பியது. யாரை குற்றம் சுமத்தலாமென்று எல்லா பெரிசுகளும் பொருமிக் கொண்டார்கள்.

ஆச்சரியம் மற்ற அப்பாகள் போல நான் சிகரெட் புடித்தேனா என்று கேட்கவே இல்லை. எப்போதும் சிகரெட் பிடிக்க என்னிடம் காசு கேட்கும் போது அவர் கொடுக்கும் கடலை மிட்டாய் லஞ்சம் குழப்பத்தை நீக்கியது. “சும்மா இழுடா? ஒண்ணே ஒண்ணு தான் நாத்தம் வராம இருக்க நா சொல்லி தரேன்”. தப்புக்கும் தவறுக்கும் நூலிழைத்தான் , நான் தப்பியது அன்று அவ்வாறு தானோ?

பண்டிகை கொண்டாடத்தில் நகரம் இன்னும் சூடுபிடிக்க வில்லை என்றாலும் சேலையை போர்த்திக்கொண்டு, துணி காய வைக்கும் தோரணையில் மூக்குத்தியுடன் ப்ரித்தி ஸிண்டா, சதா, ஸ்நேகா என வண்ண வண்ண விளம்பர பலகைகள். மகுசு கூடிய சென்னை சில்க்சும், மன்னின் மைந்தர்கள் சாரதாஸும் களைக்கட்டியது. சிப்பியில் மழை பெய்தாலும், காவிரி எதுமே இல்லாமல் வெறுமனே. சிவாஜிக்கு காத்திருக்கிறார்கள் போல. நாமும் காத்திருப்போம்.